Saturday, April 25, 2009

அமரன் சிரிப்பே சிரிப்பு !

" அமரன் சிரிப்பே சிரிப்பு " [ 9-5-1982 ]

மலர்கின்ற மலரெல்லாம் மலரேயல்ல
மங்கையவள் பெற்றதுதான் மலரேயாகும்
புலர்கின்ற பொழுதெல்லாம் பொழுதேயல்ல
பூவையவள் கண்டதுதான் பொழுதேயாகும்
வீசிவரும் காற்றெல்லாம் காற்றேயல்ல
கைவீசிவரும் பிள்ளைபட்ட காற்றேகாற்று
பூசுகின்ற அத்தர்மணம் மணமேயல்ல
புகழ்பெற்ற பிள்ளைமேனி ம்ணமேயாகும்
இசைக்கின்ற இசையனைத்தும் இசையேயல்ல
இவள்பிள்ளை இசைப்பதுதான் இசையேயாகும்
பேசுகின்ற பேச்சனைத்தும் பேச்சேயல்ல
பேரனவன் மழலைமட்டும் பேச்சேயாகும்
மயக்குகின்ற மதுவனைத்தும் மதுவேயல்ல
" மது " பிள்ளை தேன்வாய்நீர் மதுவேயாகும்
அயலார்கள் சிரிப்பதெல்லாம் சிரிப்பேயல்ல
அமரன்வாய் சிரிப்பதுதான் சிரிப்பேயாகும் ! !

Thursday, April 23, 2009

இராமலிங்கம் ! [ 6-5-1982 ]

சேரன் மகளைச் சோழன் மணந்தான்-அந்த
சோழனுக்கு ஒரு பிள்ளை பிறந்தான்
வாழவநத திருமகனோ வாய்நிறை சிரிப்பைக் கொண்டான்
தாழவந்த பருந்தின் வேகம் தவழ்வதிலே தானும் கண்டான்
கொட்டிவிட்ட தேளின் வேகம் கொண்டே நகரக்கண்டான்
எட்டிவிட்ட பொருளனைத்தும் எடுத்தெறிந்து உடையக்கண்டான்
தட்டித்தான் கேட்பதற்கு தனக்குநிகர் யார்தான் என்றான்
வெட்டிப்பேச்சு எதற்கு வேகமுள்ள பேரன் என்றேன்
நல்ல அழுகைமூலம் நாபிதன் தேவை சொல்வான்
கள்ள அழுகை காட்டி கனிவுடனே எடுக்கச்செய்வான்
பொல்லா தாமதத்தை பொறுப்பாக்கிப் பாலை மறுப்பான்
மல்லுக்கு நின்றாலும் வாய்வைத்து உறுஞ்சமாட்டான்
பேருக்கு புகழுக்குப் பேரன்தான் பிறந்துவிட்டான்
பேறுபெற்ற பாட்டனின் பெயரையே தானும்கொண்டான்
ஊருக்கு உலகத்துக்கு உயர்வோன்தான் வந்துவிட்டான்
பேரதனைச் சொல்லுகிறேன் பேரன்பெயர்" இராமலிங்கம் "
கணநாதன் அருளாலே களிப்பான வாழ்வு பெறுவான்
குணவதியாம் கலைமகளின் கனிவாலே கல்விபெறுவான்
தனமகளின் பார்வையினை தவறாதுதான் பெறுவான்
எனதான வேல்முருகன் எப்போதும் துணையிருப்பான் ! ![

Wednesday, April 8, 2009

மனிதனா ? கால்நடையா?

ஐந்தாண்டுக் கொருமுறை தேர்தல் வரும்
அனைவருமே என்னை வணங்குவார்கள்
பந்தியில் முதலிடம் எனக்கு அளித்து
பக்குவமாய் ப்ரியாணி பாயசவடை
வந்தித்து என்னை உண்ணவைத்து
வாருங்கள் வாக்குச் சாவடிக் கென்பார்
சொந்தக்கார் போல சொகுசாக போனநான்
சொன்னபடி வாக்களித்து வெளியே வந்தேன்
எந்தக்காரும் எனக்குக் காத்திருக்கவில்லை
என்னிடம் வாக்களித்தவர் ஆளேகாணோம்
சுந்தரமாய் காரில் போனவன் நான்
சூழ்ச்சியில் ' கால்நடையாய் 'திரும்பிவந்தேன் ! !

Friday, April 3, 2009

கடனை அடை !

ஐந்தாண்டு ஆட்டிப் படைக்கும் உரிமை
அனுபவிக்க முடிவு எடுக்கும் கூட்டம்
சந்தை வியாபாரத்தில் அடித்து வாங்க
சர்வ கட்சியிலும் சகல கலா வல்லவர்கள்
எந்தப் பகுதியை யார் ஆளுவது அது
சொந்த சொத்துக்களைப் பொறுத்ததாம்
க்ந்து வட்டியில் காத்திருக்கும் மன்னர்களே
இந்த முறை முழுவதுமாய்த் தீரட்டும் ! !

பார்த்த ஞாபகம் !

பார்த்த ஞாபகம் !

கனத்த உருவம் கசங்காத சட்டை
கரில் வந்து இறங்கியவரை
கைகுலுக்கி சிலர் வ்ரவேற்க
கத்திருந்த மக்களுக்கு எங்கோ
எப்போதோ பார்த்த ஞாபகம்
காத்தமுத்து பேரன் சொன்னான்
இவர் தானய்யா நம்ம எம்.பி
இந்த முறையும் தான் நிற்பதை
சொல்ல வ்ந்திருகிரார் என்றான்
இப்போது நினைவு வருகிறதென்றனர் ! !

முடிந்தால் சிரிக்க !



தேர்தல்ல சீட்டுக்கு அப்பா
ஏன் இப்படி அலையரார்?

இல்லைன்னா நாளைக்கு
உங்க காலேஜ் சீட்டுக்கு
இதைவிட அலையணுமே...!


மறப்போம் மன்னிப்போம்
என்றால் என்ன ?

தேர்தல் காலத்தில் திட்டித்
தீர்த்தவர்கள் கூட்டணி
ஆட்சியில் கூடி குலாவுவதாம்..!


நம்ம கோவிந்தசாமியை
அழைத்து வந்தது தப்பா
போச்சு...

ஏன்...என்னாச்சு ?

வேட்பு மனு தாக்கல் செய்து
வெளியே வந்தபோது
கோவிந்தா...கோவிந்தா....
என்று ஒரே சத்தம் !


நல்ல வேளை வக்கீல்கள்
பணிக்குத் திரும்பி விட்டனர்..!

உன் வழக்குத்தான் ஏதுமில்லையே..?

இல்லப்பா...முக்கிய தேர்தல்
வேலைக்கு நம் ஆட்களை
வெளியே கொண்டு வரணும்
அதான்....!

வேட்புமனு தாக்கலின் போதே
வெற்றிமாலை சூட்டியதாகச்
சொல்கிறார்களே...!

அட....நீங்க ஒண்ணு வெற்றிவேல்
போட்ட மாலையைச் சொல்றாருங்க ..!


சுற்றிப்பார்க்க வந்தவர் ஏன்
கிறு கிறுத்து விழுந்துவிட்டாராம் ?

அவர் தன்னைத் தானே சுற்றிக்
கொண்டு பார்த்தாராம்...!


முழுதும் தேடியும் ஒரு ஜோக்
தானே இருக்குது..?

இந்த புத்தகத்தில் ஒரே ஜோக்
என்று தானே நானும் சொன்னேன் !

Monday, March 23, 2009

வாழ்த்துகிறேன் !

முத்துக் குமரனின் முத்தான " ஆரோக்கியம் "நூல்

முழுவதுமாய்ப் பார்த்தேன் படித்தேன் சுவைத்தேன்

சத்தான கருத்துக்களை சலிக்காது பல கூறி

சாத்துக் கவிதைக்கான சாதனை படைத்துள்ளார்

சத்தியத்தையே சார்ந்திரு ' சரி, கம, பத, நீ, பாடிடு '

சாயுச்யத்தைக் கூறும் அழகை மிக ரசித்தேன்

நித்தமும் பெற்றோரை மற்றோரை வணக்கும்முறை நான்

நீண்டகாலமாகச் செய்கிறேன் !நிறைவாகப் பாராட்டுகிறேன்!

Saturday, March 21, 2009

ஆத்ம திருப்தி !



எல்லோரையும் திருப்திபடுத்த
எவராலும் முடியாது
எவருடைய எதிர்பார்ப்புக்கும
எதைப் பலியிட்டுமாகாது

பிறர் வாழ்வைத் திருத்துவதை
விட்டுவிடு
உன் வாழ்வை நீ வாழ
முயற்சி எடு

விதைக்கும் விதையாய்
நீ இருந்தால்
வீசும் மணம் அதில்
இருக்காது

மலர்ந்த மலராய்
நீ இருந்தால்
மகரந்த தேனும் அதில்
இருக்கும்

அன்பால் வாழ்வை
மலரச் செய்வாய்
ஆத்ம திருப்தியில்
நீ வாழ்வாய் ! !

Sunday, March 15, 2009

PRIYA DANCE 0001

Monday, March 2, 2009

கடமையை செய் பலனைப் பாராதே !


விருது வேண்டுமென்று

நடிப்பவற்கும் துடிப்பவர்க்கும்

விருது கிடைப்பதில்லை

எல்லாப் புகழும் தனக்கே

என்பவர்க்கு எதுவும் வருவதில்லை

இறைவனுக்கே புகழ் எல்லாம்

என்பவர்க்கு இரண்டு

ஆஸ்கார் விருதுகள் !

பாட்டை நீ பாடு

பலனை இறைவனிடம் விடு

கீதை சொல்வது

இதுவாக இருக்குமோ ? !



பசிக்கு உறவு !

ஊரில் திருமணம் மாரில் சந்தணம்
உள்ளே நுழைந்தவனை யாரென்றார்கள்
இல்லாத அழைப்புக்கு இவன் விருந்தாளி
சொல்லவா முடியும் தோன்றிய கணத்தில்
கல்லூரி நண்பன் மாப்பிள்ளை என்றான்
கழிசடை எல்லாம் காத்திரு என்றனர் ஏனாம்?
இவனுக்கு நடப்பது இறுபத்தியாறு
மாப்பிள்ளைக்கு நடப்பது " அறுபது கல்யாணம் "

Friday, February 27, 2009

உதவும் கரங்கள் !

எல்லா மருத்துவ மனைகளையும்

இழுத்து மூடுங்கள்

வேலை வாய்ப்பு அலுவகங்களுக்கு

பூட்டுப் போடுங்கள்

அமத்தா பகவான் அப்பச்சி பகவான்

நில்லாமல் வாருங்கள்

நினைப்பதற்கு மேல் பலமடங்கு

கைமேல் பலன் காண

சந்தேகம் இருப்பவர்கள் எங்களை

சந்தித்தவர்களை கேட்கலாம் ! !

Thursday, February 26, 2009

காதல் கலக்கல் !

குடை பறக்க கோழி பறக்க
குப்பைக்குள்ளே குமரி பறக்க
குறுந்தாடி வேந்தன் மனம் பறக்க
குதூகலிக்கும் தென்னை மரங்கள் !




ரோஜாவின் கள்ளம் !



உள்ளம் கவர்ந்த ரோஜாச் செடி
மஞ்சள் ரோஜாவைப் பறிக்கும் விரல்
முள்ளைக் குத்திக் கொண்டது அதனால்
கிள்ளிப் பறித்த பூவின் நிறம்
மஞ்சள் பாதி சிவப்பு பாதியுமாய்
கள்ளச் சிரிப்பு சிரிக்கின்றது ! !

முடிந்தால் சிரிக்க !

மகனுக்கு அறிவுமதின்னு பேர்வைச்சது
தப்பாப் போச்சு ...
ஏன்.... சலிச்சுக்கிறீங்க ?
அட .. பின்னே என்னங்க தினசரி யாராவது
வீட்டுக்கு வந்து ' அறிவு ' இருக்குதான்னு
கேட்டிட்டுப் போறாங்க ...! !

எரிவாயு எரிக்கிறது ! !



அஞ்சல் அட்டை வாங்க அரைமணி
பார்சல் அனுப்ப பலமணி நேரம்
பதிவுத் தபால் எழுத்தர் விடுப்பு
பக்கத்து இருக்கை அவருக்குப் பகை
படுத்தி எடுத்த அஞ்சல் துறை இன்று
பலசரக்கும் பயணச்சீட்டும் விற்கிறது
ஐம்பது காசுக்குப் பேசு தொலைபேசி
அறைகூவிக் கூட்டம் சேர்க்கிறது
ஒரு நாள் எரிவாயு ' தெருவினில் கூவும் '
மறுநாள் வா...என நாம் சொல்லப்போகிறோம் ! !

Tuesday, February 24, 2009

இரண்டடி உயர இசை மேதை !



இயற்கையின் படைப்பில் விதிவிலக்காவார்
இருகால் கைகள் இவருக்கில்லை
வயது நாற்பத்தி ஐந்தானாலும்
வளர்ந்தது இரண்டடி மட்டுமேயாகும்
கர்னாடக சங்கீதக் கச்சேரி செய்வார்
கனிவாகப் பல மொழி பேசி எழுதுவார்
இடது கன்னம் தோள் இடையில்பென்சில்
இவர் வைத்து எழுதும் அழகே தனிதான்
குடியரசு தலைவர் முன் கச்சேரி செய்தார்
" குறையொன்றுமில்லை "பாடலைப் பாடினார் !

Tuesday, February 17, 2009

எது ஆன்மீகம் ?

கோயிலுக்கு விளக்கேற்ற
கொண்டு செல்லும் எண்ணை
மீதமிருந்தால் வீட்டுக்கு
எடுத்து வரலமா ?

வரலாம்

வெள்ளிக்கிழமை வீட்டில்
அம்பிகைக்கு விளக்கேற்றலாமா ?

ஏற்றலாம்.

பல் விளக்கினால் பச்சைத் தண்ணியில்
வாய் கொப்பளிக்கலாமா ?
பஜனையில் பாடத்தெரியாதவர்
பாடலாமா ?
ஆடிவெள்ளி அம்பாசமுத்திரத்தில்
குளிக்கலாமா ?

வர வர பொது அறிவே
போய்விட்டது போங்கள் ! !



குழந்தைத் தொழில் !


குழந்தை கையில் பனங்காயாம்

குறுகுறுப்பான பார்வை எங்கே ?

பள்ளிச் சீருடை சிறுமி கண்டு

பரிதாபத்தில் அவன் முகமாம்

பேசும் பொற் சித்திரம்

பேசாத ஊமையாய்

காசுக்கு வேலை செய்து

கடன் கழிக்கும் அவலமிது ! !

மைக் டெஸ்டிங்க் !


பந்தல் அலங்காரம் பதாகை தோரணம்
பந்தாவாக எல்லாம் தயார் நிலை
கூட்டம் ஆரம்பிக்க தாமதம் ஆயிற்று
அமைதி காக்க அறிவிக்கச் சென்றவன்
'மைக்டெஸ்டிங்க்' என்று சொல்லாமல்
" ஒன்...ட்டூ...த்ரீ...யென்று சொன்னவுடன்
எப்போது என்று காத்திருந்த மக்கள்
எல்லோரும் எழுந்து ஓடிவிட்டனர்! !